
இலங்கையில் சிங்கள மொழியில் சிறுகதைகளையும், கவிதைகளையும் எழுதி வரும் எழுத்தாளர் மனுஷா ப்ரபானி திஸாநாயக்க ஒரு விளம்பர நிறுவனத்தில் கலை இயக்குனராகவும் விளம்பரங்களை எழுதுபவராகவும் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகப் பணி புரிந்து வருகிறார். இலங்கைத் தொலைக்காட்சிகளில் பார்க்கக் கிடைக்கும் பெரும்பாலான விளம்பரங்கள் இவர் எழுதியவைதான்.
மனிதர்களிடையேயான நேச உணர்வுகளைக் குறித்த கதைகளை அதிகளவில் எழுதி வரும் இவரது சிறுகதைகளில் ஒன்று. உலகின் சிறந்த காதல் கதைகள் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்பட்ட சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறே இவரது சிறுகதைத் தொகுப்பு விதர்ஷன சாகித்திய விருதுவிழாவில் முதன்மையான ஐந்து சிறுகதைத் தொகுப்புகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட குறுநாவல்களும், சிறுகதைகளும் 'ஆகம்', 'உரக்கச் சொல்லாத சின்னஞ் சிறிய கதை', 'பின்தொடர்தல்' ஆகிய தலைப்புகளில் தமிழில் வெளிவந்து வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.