
1979இல் மன்னார்குடியில் பிறந்த ஆசையின் இயற்பெயர் ஆசைத்தம்பி. ஆங்கில இலக்கியம் பயின்றவர். கவிஞர், புனைகதை எழுத்தாளர், அகராதியியலர், பிரதிசெம்மையாக்குநர் (எடிட்டர்). பத்திரிகையாளர், சிறார் இலக்கிய எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பல பரிமாணங்களைக் கொண்டவர். 2003-லிருந்து 2013 வரை 'க்ரியா' பதிப்பகத்தில் பணியாற்றிய இவர் 'இந்து தமிழ்' நாளிதழின் நடுப்பக்க ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.
'க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி' (விரிவாக்கப்பட்ட பதிப்பு, 2008). தமிழ் வினைச்சொற்களின் வடிவங்களுக்கான 'A Handbook of Tamil Verbal Conjugation' (2009) என்ற பெருநூல் ஆகியவற்றின் துணை ஆசிரியராகவும் ஆசை பணியாற்றியிருக்கிறார். சமூகம், இலக்கியம், வரலாறு, அறிவியல், சுற்றுச்சூழல், திரைப்படம் போன்றவை தொடர்பாக 'இந்து தமிழ்' நாளிதழில் ஆசை தொடர்ந்து நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 'இந்து தமிழ்' நாளிதழுக்காக 'தி இந்து' (ஆங்கிலம்), 'தி கார்டியன்', 'தி நியூயார்க் டைம்ஸ்' போன்ற இதழ்களிலிருந்து நூற்றுக்கணக்கான கட்டுரைகளை மொழிபெயர்த்திருக்கிறார்.